பக்கங்கள்

Wednesday, 3 January 2018

வீணையின் குரல் எஸ்.பாலசந்தர்: தோல்வியால் கௌரவிக்கப்படுதல் - 1

“தெய்வீகக் கருவியான வீணையின் சாத்தியக் கூறுகள் மிகப்பெரியது. ஆழம் காண முடியாதது. எனவே, ஆர்வம் கொண்ட, விசுவாசமுள்ள, அர்ப்பணிப்பு உணர்வு நிறைந்த மாணவன் என்ற நிலையிலேயே வாழ்நாள் முழுவதும் நான் இருப்பேன்.”
-    வீணை எஸ். பாலசந்தர்

வீணை எஸ்.பாலசந்தர் என்று இசை உலகிலும் எஸ்.பி. என்று திரைப்பட உலகிலும் அழைக்கப்படுபவர் சந்தரம் பாலசந்தர். இவருக்கும் எனக்குமான நெருக்கம் கடந்த ஓராண்டாகவே வளர்ந்து வந்துள்ளது. தற்செயலாக, பாபநாசம் சிவன் இயற்றிய ‘சிவனை நினைந்தவர்’ என்ற பாடலை பாலசந்தரின் வீணை வழியே கேட்டேன். 21 நிமிடங்கள் நீடிக்கும் இந்த வீணை இசைக்கு இணையாக எந்தவொரு இசையிலும் நான் முற்றிலும் கரைந்துபோனது இல்லை. தினமும் அதைக் கேட்பது வழக்கமானது. அவரைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள விரும்பியபோது காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘வீணையின் குரல் எஸ்.பாலசந்தர்’ என்ற நூலைத் தெரிந்துகொண்டேன்.


ஆங்கிலத்தில் விக்ரம் சம்பத் என்பவர் எழுதிய ‘Voice of the Veena S Balachander’ என்ற நூலின் தமிழாக்கம் இது. வீயெஸ்வீ என்பவர் மொழிபெயர்த்திருக்கிறார். ஆங்கில மூலத்தை எழுதிய விக்ரம் சம்பத் பெங்களூரைச் சேர்ந்தவர். பெங்களூர் இலக்கியத் திருவிழாவை நிறுவியவர். மைசூர் நகரத்தைப் பற்றியும் பாடகரும் நடனக்கலைசருமான கவுஹர் ஜான் பற்றியும் இரு முக்கிய நூல்களை எழுதியவர். அவர் எழுதியுள்ள பாலசந்தர் பற்றிய நூல் மிக முக்கியமான நூல் என்பது அதைப் படித்தவுடன் தெளிவாகிறது. இப்படிச் சொல்வதற்கான காரணங்களை குறிப்பிடுவதற்கு முன் இந்நூல் அளிக்கும் பாலசந்தரின் வாழ்க்கை சித்தரத்தைத் தொகுத்துப் பார்க்கிறேன்.

பாலசந்தரின் குடும்பம் தஞ்சாவூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியத்தைப் பூர்வீகமாகக் கொண்டது. 1927ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி சுந்தரம் ஐயருக்கும் செல்லமாள் என்ற பார்வதிக்கும் நான்காவது குழந்தையாகப் பிறந்தவர் பாலசந்தர். அப்பா சந்தரம் இசையில் மிகவும் ஆர்வம் கொண்ட, இசை நுணுக்கங்களை அறிந்துகொள்வதில் ஈடுபாடு அற்ற ரசிகர்.  அவர் பாலசந்தரை சிறுவயது முதலே இசை பயிலுவதற்கு ஊக்குவித்திருக்கிறார். பாலசந்தரின் உடன் பிறந்தவர்களில் மூத்தவரான ராஜம் வாய்ப்பாட்டில் இளமையிலேயே பல பரிசுகள் பெற்றவர். ஓவியம், நடிப்பு என பல்வேறு திறமைகளை வளர்த்துக்கொண்டவர். சுந்தரம் ஐயருக்கு அக்காலத்திய இசைக் கலைஞர்கள் பலருடன் நட்புறவு இருந்திருக்கிறது. பல இசைக் கலைஞர்கள் சுந்தரம் ஐயரின் வீட்டில் கூட பாட்டும் அரட்டையுமாக நேரத்தைக் கழித்து வந்தார்கள். இப்படிப்பட்ட சூழலில் ஒரு நாள் பாலசந்தரின் வீட்டுக்கு வந்தவர்களில் ஒருவர் அவருக்கு கஞ்சிரா ஒன்றை பரிசளித்துள்ளார். அதைப் பெற்றுக்கொண்ட பாலசந்தருக்கு நான்கு வயதே ஆகியிருந்தது. ஆனால், தன்முயற்சியால் யாரது உதவியும் இல்லாமல் கஞ்சிரா இசைக்கக் கற்றுக்கொண்டார் பாலசந்தர்.

1933ஆம் ஆண்டில் திரைப்பட இயக்குனர் சாந்தாரம் உள்ளிட்ட சிலர் நடத்தி வந்த பிரபாத் சினிமா கம்பெனி சைரந்திரி என்ற திரைப்படத்தைத் தயாரித்து பெரும் நஷ்டத்தைச் சந்தித்தது. இழப்பை ஈடுகட்ட சைரந்திர படத்திற்கான செட்டை வைத்து, முழுக்கு முழுக்க புதுமுகங்களைப் போட்டு தமிழில் ஒரு படம் எடுக்க முடிவுசெய்தது. இந்த காலத்தில் பாலசந்தரின் குடும்பம் சென்னை மயிலாப்பூருக்குக் குடிபெயர்ந்திருந்தது. மயிலாப்பூரில்தான் பாலசந்தர் பிறந்திருக்கிறார். பாலசந்தரின் குடும்பத்தினரையும் சினிமா மோகம் விட்டுவைக்கவில்லை. சுந்தரம் ஐயரின் நண்பர் மூலம் பிரபாத் கம்பெனியின் தமிழ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்து சேர்கிறது. பாலசந்தரின் அண்ணன் ராஜம், சகோதரி ஜெயலட்சுமி, தந்தை சந்தரம் ஆகிய மூவர் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு பெற்றனர். ‘சீதா கல்யாணம்’ என்று பெயரிடப்பட்ட இந்தப் படம் 1934ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் ராவணன் தர்பாரில் பாடும் இசைக் கலைஞனாகத் தோன்றி, தன் கஞ்சிரா வாசிக்கும் திறமையைக் காட்டினார் பாலசந்தர். இதுவே பாலசந்தரின் முதல் கலையுலக பிரவேசமாக அமைந்தது. இயக்குனர் சாந்தாரமிடம் இருந்து தபேலா செட் ஒன்றும் பரிசாகக் கிடைத்தது.

1950கள் வரை  வரை பேசப்பட்ட  ‘சீதா கல்யாணம்’ படத்தின் புகழால் பாலசந்தரும் அவரது அண்ணன் ராஜமும் பல இசைக் கச்சேரிகளை நடத்தும் வாய்ப்பைப் பெற்றனர். இலங்கைக்கும் கராச்சிக்கும் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். அப்பருவத்தில் செஸ் விளையாட்டிலும் கில்லாடியாக இருந்த சிறுவன் பாலசந்தர் இலங்கையில் பயணத்தில் தன் சாதுர்யத்தினால் உலகப் புகழ்பெற்ற வீரர்களுடன் செஸ் விளையாடி, அவர்களை வியக்க வைத்தார். கராச்சியில் நடந்த இசை நிகழ்ச்சிக்குப் பின் ரசிகர் பாலசந்தருக்கு சிதார் ஒன்றை பரிசளித்திருக்கிறார். இதிலும் சில மாதங்களிலேயே வித்தகனானார் பாலசந்தர். 14 வயதிலேயே அகில இந்திய வானொலி நிலையத்தின் நிலைய வித்துவானாக பணியாற்றியுள்ளார். சிறுவனான பாலசந்தருக்கு ஒவ்வொரு மாதமும் அளிக்கப்பட்ட சம்பளத்தை அவரது தந்தை வந்து பெற்றுச்சென்றாராம்! 1942 வரை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நிலைய வித்துவானா இருந்த பாலசந்தர் வானொலி நிலையத்தில் இருந்த வாத்தியங்கள் மூலம் தன் திறமையை விரிவாக்கிக்கொண்டார். கஞ்சிரா, தபேலா, சிதார், தில்ருபா, சூர்பஹார், பியானோ, தரங், டோலக், யெஸ்ராஜ் என பல வாத்தியங்களை தானாகவே வாசிப்பதில் வெற்றி அடைந்தார். ஆனால், வானொலி நிலையத்தில் பாலசந்தருக்கு முதல் முதலில் அறிமுகமான வீணை அவரது வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாக கலந்துவிட்டது.

வீணைக்காக மற்ற அனைத்து வாத்தியங்களின் மீது இருந்த தனது ஆர்வத்தையும் செஸ் விளையாட்டு போன்ற மற்ற விஷயங்களில் இருந்த ஆர்வத்தையும் ஒதுங்கி வைத்தார் பாலசந்தர். முழு மூச்சில் வீணையை கற்றுக்கொள்ள முற்பட்டார். இம்முறையும் சுயமாகவே வீணை வாசிப்பை தன்வசப்படுத்த நீண்ட பயற்சிகள் மேற்கொண்டார். அடுத்த ஓராண்டிற்குள் வீணை பாலசந்தரின் உடலில் ஓர் உறுப்பாகவே ஆனது. 1943ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி, 16 வயதில் பாலசந்தரின் முதல் வீணைக் கச்சேரி அரங்கேறியது.

வீணை கலைஞரான பின்பு மற்ற வாத்தியங்களை வாசிப்பதை நிறுத்தினாலும் சினிமாவில் நாட்டம் ஏற்பட்டது பாலசந்தருக்கு. கைதி, அந்த நாள், பொம்பை, நள்ளிரவில் போன்ற படங்கள் அவருக்கு அக்காலத்தில் பாலசந்தருக்கு இணையற்ற புகழை ஈட்டித்தந்தன. 1948ஆம் ஆண்டு வெளியான இது நிஜமா? முதல் அவரது கடைசி படமான நள்ளிரவில் வரை பாலசந்தர் தனது பன்முகத் திறமையை திரைத்துறையிலும் நிரூபித்தார். நடிகர், பாடகர், இசையமைப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என்று சினிமாவின் பல பணிகளில் ஈடுபாட்டுடன் செயல்பட்டார். சீதா கல்யாணம் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தபோது அவர் கவனம் செலுத்திய தொழில்நுட்ப விஷயங்களை பாலசந்தருக்கு பின்னாளில் மிகவும் கைகொடுத்தன.

பாலசந்தரின் வாழ்க்கையை மூன்று வகைகளில் அணுகலாம். அவரது திரைத்துறை பங்களிப்பு, வீணையிலும் கச்சேரி நடைமுறைகளிலும் புகுத்திய புதுமைகள் மற்றும் அவர் எதிர்கொண்ட அல்லது ஏற்படுத்திக்கொண்ட சர்ச்சைகள். இம்மூன்றிலும் பாலசந்தர் இசைத்துறையின் கவனிக்கத்தக்க ஆளுமையாகவே செயல்பட்டிருக்கிறார்.

சினிமாவில் இருந்த குறுகிய காலத்தில் அத்துறையினரிடம் சகஜமாக இருந்த ஒழுங்கின்மையை முற்றிலும் வெறுத்தவர் பாலசந்தர். படப்பிடிப்புத் தளத்தில் கறாராக நடந்துகொண்டார். சினிமா தொழில்நுட்பத்திலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. புதிய சினிமா தொழில்நுட்பங்கள் பற்றி உடனுக்குடன் தெரிந்துகொண்டு அதை தன் படங்களில் பயன்படுத்தினார். தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு என்று தனியே அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி அதில் தீவிரமான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். வாரந்தோறும் சிறந்த படங்களைத் திரையிடுவது போன்ற முயற்சிகளை சினிமா தொழில்நுட்பக்கலைஞர்கள் சங்கத்தின் மூலம் தொடங்கிவைத்தார். தொழில்நுட்பக் கலைஞர்கள் உரிய மதிப்பையும் அங்கீகாரத்தையும் பெற அடிகோலினார். பொம்மை படத்தில் வித்தியாசமான முறையில் படத்தில் பணியாற்றிய அனைவரையும் தானே அறிமுகம் செய்து வைத்தது தமிழ்சினிமாவுக்குப் புதிது. பாடல்களின் நடுவே சம்பந்தம் இல்லாத உளறல்கள், ஆங்கில வரிகள், பேச்சு போன்றவற்றை இடம்பெறச் செய்வது மேற்கத்திய இசையை கலந்த பாடல்களை அளித்தது என இசையமைப்பாளராகவும் பல புதுமைகள் செய்தார். அதே சமயத்தில் தனது அந்ந நாள் படத்தை பாடல்களே இல்லாமலும் இயக்கினார். தனது படங்களில் வெவ்வேறு காட்சிக்கோணங்களை பயன்படுத்தி ரசிகர்களை அசரவைத்தார். இருப்பினும், 1970ஆம் ஆண்டு வந்த நள்ளிரவில் படத்துடன் திரைத்துறையிலிருந்து முற்றிலும் விலகினார். பின்னாளில் சிறிது காலம் திரைப்படத் தணிக்கைக் குழுவில் பணியாற்றியுள்ளார்.

வீணை இசையை முதல் முதலில் உலகம் முழுவதும் பரவச்செய்த பெருமையும் பாலசந்தரையே சாரும். இதற்காக, ‘சங்கீத மெட்ராஸ்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அமெரிக்கா, பாரிஸ், ஹங்கேரி, சோவியத் யூனியன், போலந்து உள்ளிட்ட பல நாடுகளில் கச்சேரிகள் நடத்தினார். இந்திய சாஸ்த்ரீய சங்கீதத்திலும் குறிப்பாக வீணையிலும் பரீட்சயமற்ற வெளிநாட்டு ரசிகர்களுக்கு நிகழ்ச்சியில் இடம்பெறும் ராகங்கள் பற்றி துண்டுப்பிரசுரங்களை முன்கூட்டியே அளித்தார். இதில் கச்சேரியில் இடம்பெறும் இசையை ரசிப்பதற்குத் தேவையான தகவல்கள் இடம்பெற்றிருந்தன. பாலசந்திரன் இத்தகு கச்சேரிகள் பெரும் வெற்றிகளைக் குவித்தன. ஆனால், பெரும்பாலும் பாடல்கள் எதுவும் இல்லாமல் ராகங்களையே தன் கச்சேரி முழுவதிலும் வாசித்தார். தமிழ்நாட்டிலும் அந்த காலத்தில் வாத்திய இசையைக் காட்டிலும் வாய்ப்பாட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக ஆதரவு இருந்தது. பாலசந்தர் அப்போது தனி வீணை கச்சேரிகளை நடத்தியும் வெற்றி பெற்றார். இத்தகு கச்சேரிகளில் ஒரு ராகத்தை 45 நிமிடங்கள் வாசிப்பார். அந்த ராகத்தின் அனைத்து சாத்தியங்களையும் காட்டுவதாக அது அமையும். பின்னாளில், Marvellous Melakarta Melodies என்ற பெயரில் 72 மேளகர்த்தா ராகங்களையும் இதே போல வாசித்து பதிவுசெய்தார். இசை உலகிற்கு தனது முதன்மையான பங்களிப்பு இது என்று பாலசந்தரே குறிப்பிட்டிருக்கிறார். இந்த ஆல்பத்தைப் போல பல நீண்ட நேர இசைப் பதிவுகளை (Long Playing Records) வெளியிட்டிருக்கிறார் பாலசந்தர். வீணையின் நாதம் முழுமையும் வெளிப்படவும் அதன் சாத்தியங்களை விரிவுபடுத்திக்கொண்டே போகவும் ஏதுவாக சில மாற்றகளைச் செய்து தனக்கான வீணைகளை உருவாக்கிக்கொண்டார் பாலசந்தர். கச்சேரிகளில் கடைசியில் அமர்ந்திருக்கும் ரசிகருக்கும் வீணையின் நுட்பமான ஒலிகளும் சென்றடையும் வகையில் வீணையில் ஒலிவாங்கி பொறுத்திக்கொண்டார். பின்னர், அதற்கு ‘SB Magnetic Pickup’ என்ற பெயர் ஏற்பட்டு அதே போன்ற ஒலிவாங்கிகளுடன் வீணைகள் தயாரிக்கப்பட்டன.

SB with Western Michigan University students and professors
(Photos Courtesy: The Hindu Archives via Google Images)
பாலசந்தர் தனது மாணவர்களாக நிறைய பேரை அங்கீகரிக்கவில்லை. அவரிடம் மாணவர்களாக இருந்தவர்களில் காயத்ரி தற்போது புகழ்பெற்ற வீணை கலைஞராக அறியப்படுகிறார். இவரது உறவினரான ஜெயந்தி குமரேஷ் பாலசந்தரிடம் மாணவியாக இருந்தவர். இவர்களுக்கும் பாலசந்தர் பெரிதாக எதையும் ‘கற்றுக்கொடுத்தார்’ என்று சொல்வதற்கில்லை. முன்னரே வீணையின் அடிப்படைகளைக் கற்றுத்தேர்ந்த அவர்கள் தங்கள் வாசிப்பை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்திக்கொள்ள பாலசந்தரின் துணை நின்றார் என்றே குறிப்பிட முடியும். தவிர பத்மாவதி, வேணி மாதவன் ஆகியோர் குறிப்பிட்ட காலத்திற்கு பாலசந்தரின் மாணவர்களாக இருந்தவர்கள். கருணாநிதியின் பேத்தி எழிலரசி, சந்திரிகா, ஜெயஸ்ரீ மகேஷ், சிவசக்தி ஆகியோரும் குறுகிய காலம் பாலசந்தரின் மாணவர்களாக இருந்தவர்கள். பாலசந்தரின் மனைவி சாந்தா தங்கள் மகன் எஸ்.பி.எஸ்.ராமனுக்கு பாலசந்தர் வீணை பயிற்றுவிக்க வேண்டும் விரும்பியிருக்கிறார். ஆனால், பாலசந்தர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ஆரம்பத்தில் தந்தையைப் போலவே தானாக வீணையை வாசிக்க முயன்ற ராமன், பின்னர் முயற்சியைக் கைவிட்டு வழக்கறிஞராகிவிட்டார்.

பாலசந்தரின் வாழக்கையில் இன்னொரு தவிர்க்க முடியாத நீண்ட காலமாக தொடர்ந்த அம்சம் அவருடன் எப்போதும் இருந்த சர்ச்சைகள்.  அவற்றில் மிக நெடுங்காலமாக பேசப்பட்டவை மூன்று. 1973ஆம் ஆண்டு முதல் பாலசந்தர் உருவாக்கும் சர்ச்சைகள் தீவிரமடையத் தொடங்கின. அந்த ஆண்டில் சென்னையில் மெட்ராஸ் மியூசிக் அகாடமி வழங்கும் சங்கீத கலாநிதி விருது பரதநாட்டியக் கலைஞர் பாலசரஸ்வதிக்கு அறிவிக்கப்பட்டது. இசைத்துறையில் கர்நாடக சங்கீத கலைஞர்களுக்கு கிடைக்கும் மிக உயரிய விருதாக இந்த விருது உயர் அந்தஸ்தை எட்டிவிட்டது. இதனை நாட்டியத்தில் சிறந்தவரான பாலசரஸ்வதிக்கு அளிப்பதை எதிர்த்து மியூசிக் அகாடமிக்கு கடிதம் எழுதினார் பாலசந்தர். ஆனால், அவரது கடிதத்திற்கு பலனளிக்கவில்லை. தனக்கு விருது கிடைக்கவில்லை என்பதால்தான் பாலசந்தர் நாட்டியக் கலைஞருக்கு இசைக்கான விருது வழங்குவதா? என்று சர்ச்சையைக் கிளப்பினார் என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.

1978ல் அந்த ஆண்டிற்கான சங்கீத கலாநிதி விருது பெற்ற பாலமுரளிகிருஷ்ணாவுக்கு எதிரான விமர்சனத்தை சங்கீத அகாடமிக்கு எழுதினார் பாலசந்தர். விழா மலரில் இடம்பெறும் விருது பெறும் கலைஞரைப் பற்றிய குறிப்பில் பாலமுரளி சில ராகங்களை புதிதாகக் கண்டிபிடித்திருக்கிறார் என்று கூறப்பட்டிருக்கிறது. இதனை விருது விழா முடிந்த பிறகு கவனித்த பாலசந்தர், பாலமுரளி கண்டுபிடித்ததாக கூறிக்கொள்ளும் ராகங்கள் ஏற்கெனவே பாடப்பட்டு வந்திருக்கின்றன என்றும் பழைய புத்தகங்களில் அவற்றைப் பற்றி எழுதப்பட்டள்ளன என்றும் மேற்கோள்கள் காட்டி சங்கீத அகாடமிக்கு கடிதம் எழுதியுள்ளர். தனது கடிதத்தில் இதைப் பற்றி சங்கீத அகாடமியின் நிபுணர் குழு விசாரித்து முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார். ‘ராக சர்ச்சை’ என்ற பெயரில் ஓராண்டுக்கும் மேலாக நீண்ட இச்சர்ச்சையின் தொடக்கத்தில் பாலசந்தரின் குரலுக்கு சங்கீத அகாடமி செவிமடுக்கவில்லை. அப்போது சங்கீத அகாடமியின் அதிகாரத்தில் அதிக தாக்கத்தைச் செலுத்தி வந்த செம்மங்குடி சீனிவாச ஐயர் பாலசந்தரின் குற்றச்சாட்டில் ஞாயம் இருப்பதாகவே நினைத்தார். இருந்தாலும், சங்கீத அகாடமியின் பெயருக்கு கலங்கம் ஏற்படும் என்பதால் இந்த எதிரக்குரலை பொருட்படுத்தாமல் தவிர்த்துவிடுவதே உசிதமானது என்று அகாடமியை அதற்குத் தயார்படுத்தினார். ஆனால், பின்னர் நிபுணர் குழுவில் விவாதிக்கப்பட்டு பாலமுரளிக்கு எதிரான முடிவே வந்தது.

Photo Courtesy: India's Great Masters, Raghu Rai
1980களில் பாலசந்தரின் வாழ்க்கையிலேயே மிகப்பெரிய இடத்தைப் அடைத்துக்கொண்ட சுவாதி திருநாள் பற்றிய சர்ச்சை உருவானது. இந்தப் புத்தகத்தின் பெரும் பகுதியே இந்த சர்ச்சையைப் பற்றி பேசுகிறது. சுவாதி திருநாள் என்ற திருவிதாங்கூர் சமஸ்தானத்து அரசர் பல மொழிகளில் ஏராளமான கீர்த்தனைகளை இயற்றிள்ளதாகவும் அவர் சங்கீத மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோருக்கு நிகரானவர் என்றும் 1940களில் பிரசாரம் தொடங்கியது. 1981ஆம் ஆண்டு செம்மங்குடி சீனிவாச ஐயர் சுவாதி திருநாளின் பாடல்களை முதல் முறையாக சென்னை கச்சேரியில் பாடினார். அவரே சுவாதி திருநாளின் வாழ்க்கை வரலாற்றையும் சங்கீத பங்களிப்பையும் பற்றி ‘மகாராஜா ஸ்ரீ சுவாதி  திருநாள்’ என்ற நூலை எழுதினார். நேஷனல் புக் ட்ரஸ்ட் (NBT) இதனை வெளியிட்டது. சுவாதி திருநாள் பாடல்களின் முதல் தொகுப்பாக முத்தையா பாகவதர் வெளியிட்ட நூல் 1943ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. அதே ஆண்டில் சுவாதி திருநாள் பிறந்தநாளை மியூசிக் அகாடமி கொண்டாடிய போது, செம்மங்குடியே இரண்டாவது தொகுப்பை வெளியிட்டார். இதில் 101 பாடல்கள் இருந்தன. 1975ஆம் ஆண்டில் Swathi Thirunal And His Music என்ற தலைப்பில் வேங்கடசுப்பிரமணிய ஐயர் ஆங்கிலத்தில் விரிவான வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றை எழுதினார். இதன் தழுவலாகவே செம்மங்குடி தனது நூலை தமிழில் எழுதியிருக்கிறார்.

செம்மங்குடியின் இந்த நூல் வந்தவுடன்தான் பாலசந்தர் சுவாதி திருநாள் பற்றி பொதுவில் கருத்து தெரிவிக்கிறார். சுவாதி திருநாளை மும்மூர்த்திகளை விடவும் மேலானவர் என்றே செம்மங்குடி இந்நூலில் பாராட்டுகிறார். மும்மூர்த்திகளுக்கு நிகராக சுவாதி திருநாள் திடீரென உயர்த்திப்பிடிக்கப்படுவதை உணர்ந்து தனது விமர்சனத்தை மியூசிக் அகாடமிக்கு எழுதினார் பாலசந்தர். ராக சர்ச்சையில் செய்ததைப்போல நிபுணர் குழுவின் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த விஷயத்தில் பாலசந்தரின் குரல் மியூசிக் அகாடமியின் புறக்கணிப்பால் மங்கிப்போனது. அத்துடன் பாலசந்தர் இசையில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு தேவையில்லாத வம்புகளை இழுத்துக்கொள்வதாகவும் விமர்சனம் வந்தது.

சுவாதி திருநாள் மும்மூர்த்திகள் அளவிற்கு போற்றத்தக்கவர் அல்ல என்றும் அவருக்கு பின் வந்தவர்களின் இடத்தில் மதிப்பதில் ஆட்சேபனை இல்லை என்றும் பொருள்பட கருத்து கூறிவந்தார் பாலசந்தர். சுவாதி திருநாள் மறைந்து 100 ஆண்டுகளுக்கு மேல் கடந்த பிறகு சுவாதி திருநாள் பற்றிய சிலாகிப்புகள் எழுவது எப்படி? இவ்வளவு காலம் அவரது பாடல்கள் எங்கே இருந்தன? யாராவது அந்த பாடல்களைப் பாடிவந்தனரா? என்று பல கேள்விகளை முன்வைத்து நீண்ட கடிதங்களை அனுப்பி விசாரணையைக் கோரினார் பாலசந்தர். இதைத் தட்டிக்கேட்க வேண்டியது இசைத்துறையில் இயங்கும் கலைஞனாக தனது கடமை என்றே கருதினார். எந்தவித சாதகமான முன்னேற்றமும் இல்லாமல் நீடித்த இந்த விவகாரம் உச்சநிதீமன்றத்தில் வழக்கு தொடரும் அளவிற்குச் வளர்ந்ததை இந்நூலின் இறுதி பகுதிகள் விவரிக்கின்றன.

-

வீணையின் குரல் எஸ்.பாலசந்தர்: தோல்வியால் கௌரவிக்கப்படுதல் - 2